Monday, April 9, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-6

வேலூர் 'பாகியாத்துஸ் சாலிஹாத்' அரபிக் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டில், மார்க்கக் கல்வி பயின்றுகொண்டிருந்த மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக நான் பணியமர்வு பெற்றிருந்த காலம் அது. தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பது எவ்வாறு என்று சிந்தித்த என் தேடலுக்கு, பேரா. அ.கி. பரந்தாமனாரின் 'நல்ல தமிழ் எழுதவேண்டுமா?' எனும் நூல் கிடைத்தது.  அதனையே 'பாட நூலாக' வைத்துப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன்.  சில அடிப்படை இலக்கணங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டு, பிழைகளின்றி உரைநடை எழுத அவர்களைப் பயிற்றுவிப்பான் வேண்டி, அதிலிருந்த 'சேர்த்து வைத்த குப்பை', விட்டுவிட்ட குப்பை', செல்லாத காசுகள்' ஆகிய நூல் பிரிவுகளை விரிவாகப் பாடம் நடத்தினேன்.  மாஷா அல்லாஹ்!  அவர்களுள் சிலர் இன்று தேர்ந்த எழுத்தாளர்களாகத் திகழ்வதைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின்றது.

பல்லாண்டுகள் கழித்து, இத்துறையில் தொடராகக் கட்டுரை எழுதத் துணிந்தபோது, புலவர், முனைவர் மா. நன்னன் அவர்கள், அன்றாடம் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சொற்பிழைகளைச் சுட்டிக் காட்டித் தனி நூல்கள் பலவற்றை எழுதியிருப்பது என் பார்வைக்கு வந்தது.  அந்த நூல்களும் இந்தத் தொடரை எழுதப் பெரிதும் உதவியாக இருந்தன.  இனி, பிழைகளுக்குள் நுழைந்து, திருத்தம் காண்போம்.....

நூல்கள் / நூற்கள்:  'நூல்' என்பது புத்தகம், ஏடு எனப் பொருள்படும்.  இதனைப் பன்மையாக எழுதும்போது, 'நூல்கள்' என்றுதான் எழுதவேண்டும்.  ஆனால், நம்மில் பலர் - அல்ல, பல்லாயிரக் கணக்கானோர் - 'நூற்கள்' என்று தவறாக எழுதுகின்றனர்!  இத்தவற்றைச் சுட்டிக்காட்ட, ஓர் எளிய எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.  'கால்' என்பதன் பன்மை, 'கால்கள்' ஆகும்.  அவ்வாறின்றி, 'காற்கள்' என்றா எழுதுகின்றோம்?  இல்லையே!

உடைமை / உடமை:  ஒன்றைப் பெற்றிருப்பதற்கு, 'உடைமை' என்ற சொல் முறையாகப் பயன்படுத்தப்படவேண்டும்.  இதனை 'உடமை' என்று எழுதக் கூடாது.  இது போன்ற ஒரு சொல்தான் 'தலைமை' என்பதும்.  இதனையும் 'தலமை' என்று எழுதக் கூடாது.  ஆனால், 'வழமை' என்பதை, 'வழக்கம்' அல்லது 'வழமை' என்றுதான் எழுதவேண்டும்.  மாறாக, 'வழைமை' என்று எழுதக் கூடாது.  பழையனவற்றைப் 'பழமை' என்றுதான் எழுதவேண்டும்;  'பழைமை' என எழுதக் கூடாது.

ஏமாற்றம்:  ஒருவர் ஏமாற்றம் அடைந்ததை, 'ஏமாந்தார்' என்று மிகப் பலர் எழுதுகின்றனர்.  தவறு!  ஏனெனில், 'ஏமாந்தார்' என்பதில் 'ஏமாப்பு' (இறுமாப்பு), 'ஏமாந்து' (இன்பமுற்று), 'ஏமாந்த' (அவாவுற்ற) என்ற வேறு பொருள் தரும் வினைகள் மறைந்துள்ளன.  எனவே,  'ஏமாற்றமடைந்தார்', அல்லது 'ஏமாறிப் போனார்', அல்லது 'ஏமாறினார்' என்று இலகுவாக - முறையாக எழுதவேண்டும்.  இவற்றுள் 'ஏமாறினார்' என்பதை எழுதும்போது கவனம் தேவை.  ஏனெனில், 'ற்' என்ற ஒற்றெழுத்து தவறாக இடையில் புகுந்துவிடுமாயின், அது பிறவினையாகிவிடும்; பிறர் அவரால் ஏமாற்றப்பட்டார் என்று ஆகிவிடும்!

'சுவற்றில் எழுதாதே!': இவ்வாறு எழுதியிருப்பதைப் பலவிடங்களில் நாம் காண்கிறோம்.  'சுவரில் எழுதாதே!' என்றுதான் எழுதப்படல் வேண்டும்.  ஏனெனில், 'சுவர்' என்பதுதான் சரியானது; 'சுவறு' அன்று. 'சுவறு' என்பது, 'உறிஞ்சு', 'வற்றிப்போ', 'காய்ந்துபோ' என்றெல்லாம் வேறு பொருள்களைத் தரும்.  இதனைப் போன்றதுதான் 'தவறு' என்ற சொல்லும்.  'தான் செய்த தவருக்காக வருந்தினார்' என்று எழுதக் கூடாது.  'தவறுக்காக' என்பதே சரியாகும்.  'தவரு' என்பது தவறு.

துவங்கு / துவக்கு:  ஒருவர் அல்லது ஒரு பொருள் தானாகவே தனக்குள்ளே இயங்கத் தொடங்குவது, துவங்குதல் அல்லது தொடங்குதல் எனப்படும். 'அவர் சொற்பொழிவாற்றத் துவங்கினார்' என்று கூறலாம்.  அல்லது, 'ஐ'காரத்தைச் சேர்த்து, 'அவர் சொற்பொழிவைத் துவக்கினார்' என்று கூறலாம்.  'பட்டுப் போன மரம் பருவ மழையால் துளிர்க்கத் தொடங்கிற்று' எனலாம்.  இங்கு, 'தொடக்கிற்று' என்றோ, 'துவக்கிற்று' என்றோ எழுத முடியாது.  'ஆசிரியர் பாடத்தைத் துவக்கி வைத்தார்' என்று கூறலாம்.  ஆனால், 'துவங்கி வைத்தார்' என்று கூற / எழுதக் கூடாது.

இருக்கும்போது / இருந்தபோது:  தொடர் நிகழ் காலத்தில் ( Present continuous ) ஒன்றைக் குறிக்க, 'இருக்கும்போது' என்பதைப் பயன்படுத்தலாம்.  ஆனால், தொடர் கடந்த காலத்தில் ( Past continuous ) ஒன்றைக் குறிக்க, 'இருந்தபோது' என்பதைப் பயன்படுத்தவேண்டும்.  எ.கா.: 'பாடம் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் பேசக் கூடாது' என்றும், 'நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது பேருந்து வந்து நின்றது' என்றும் எழுதவேண்டும்.  இது போன்றே, வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை விளக்கி எழுதவேண்டுமாயின், 'நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள்' என்பதை, 'நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள்' என்று எழுதக்கூடாது.  'கட்டடத்தைக் கட்டும்போதே இதைச் செய்திருக்கவேண்டும்' என்பதில் உள்ள 'கட்டும்போதே' என்பதை, 'கட்டியபோதே' என்று மாற்றி எழுதவேண்டும்.  ஏனெனில், இது சென்ற காலச் சொற்றொடர்.  'நான் பார்க்கும்போதே நீ இப்படிச் செய்கிறாயா?' எனும் நிகழ்காலக் கூற்றில், 'பார்க்கும்போதே' என்ற நிகழ்கால வினைப் பயன்பாடு சரியானதே.  இவ்வாறு, நாம் சொற்றொடரில் பயன்படுத்தும் காலத்தைப் பொருத்து வினையும் அமைக்கப்படல் வேண்டும்.  எழுதிப் பழகினால் எல்லாம் சரியாக வரும்.

எந்த:  'எந்த' எனும் சொல் ஒருமையாகும்.  எனவே, அதனைத் தொடர்ந்து வரும் சொல்லும் ஒருமையாகவே அமையவேண்டும்.  ஆங்கிலத்தில்கூட, Any என்ற சொல் singular (ஒருமை)தான்.  Any man, any book, any time என்றெல்லாம் எழுதலாம்.  ஆனால், Any men, any books, any times என்று plural (பன்மை)யாக எழுத அல்லது பேசக் கூடாது. ஆகவே, 'எந்த'வுக்குப் பின்னர் பன்மை வரக் கூடாது.  'எந்த மனிதனும்' என்று எழுதலாம்; பேசலாம்.  ஆனால், 'எந்த மனிதர்களும்' என்பது தவறு.  சமுதாயம் என்பது மனிதர்களின் ஒரு கூட்டமைப்புத்தான் என்றாலும், அது ஒருமைதான்.  எனவே, 'எந்தச் சமுதாயமும்' என்று எழுதுவதும் பேசுவதும் தவறன்று.


-(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

- அதிரை அஹ்மது 

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-5

அருகில் மனம் விட்டு 


'நல்ல தமிழ் எழுதுவோம்; நம் மொழியைப் பேணுவோம்' என்ற ஒரே நோக்கத்தில் பதிவு பெற்று வரும் இத்தொடர், எனது ஆய்வையும் பட்டறிவையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் ஒன்றாகும்.  இதில் சுட்டிக் காட்டப் பெறும் திருத்தங்களுக்கான சான்றுகள் தொல்காப்பியம், நன்னூல் போன்ற மொழியியல் நூல்களில் விரவிக் கிடக்கின்றன.  ஆனால், அச்சான்றுகளையும் எடுத்தெழுதினால், விரையும் நேரச் சூழலில் விளைவு போற்றத் தக்கதாக இருக்காது என்றெண்ணியே, சான்றுகளை விடுத்துச் சரக்குகளை மட்டும் இறக்கி வைக்கின்றேன்.  இனித் தொடர்வோம்...

அருகாமை...!: 'அருகில்' என்று பிழையின்றி எழுதுவதை விடுத்து, நம்மில் பலர், 'அருகாமையில்' என்று பிழைபட எழுதுகின்றனர்!  இவர்களின் நோக்கம், 'கவர்ச்சியாக எழுதுகின்றோம்' என்பதாக இருக்கலாம்.  இது மிகப் பெருந்தவறாகும்.  ஏனெனில், 'அருகில்' எனும் சொல்லில் வேறொரு பொருளைத் தரும் சொல் மறைந்து கிடக்கவில்லை.  ஆனால், 'அருகாமை' என்பதில் மாற்றுப் பொருள் தரும் வேறொரு சொல் பொதிந்துள்ளது!  அதாவது, அருகுதல் = சுருங்குதல், குறைந்து போதல் என்ற வேறுபாடான பொருள் தரும் நிலை உள்ளது.  நெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் குறைதலுக்கும் வேறுபாடு உண்டாகி, 'சுருங்காமை', அல்லது 'குறையாமை' என்ற பொருள்களைத் தருகின்றதல்லவா?  எனவே, அண்மையக் குறிக்க, 'அருகில்' என்று எழுதுவதே சரியானது; 'அருகாமை' தவறானது.
மனமா? மனதா? மனசா?:  உள்ளம் என்பதற்கு 'மனம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.  'மன மகிழ்ச்சி', 'மன வேதனை', 'மன நிலை' என்றெல்லாம் எழுதுவோம்.  இல்லையா?  ஆனால், நம்மில் பலர் 'மனம்' என்ற சொல்லோடு வேற்றுமை உருபுகளான ஐ-ஆல்-கு-இன்-அது-கண் என்பவற்றைச் சேர்க்கும்போது, 'மனம்' என்பதை 'மனது' என்று மாற்றி, 'மனதை வேதனைப்படுத்தியது' என்றோ, 'மனதால் நம்பினார்' என்றோ, 'மனதுக்கு இதமாயிருந்தது' என்றோ, 'என் மனதின் வேதனை' என்றோ, 'மனதினது நிலையை' என்றோ, ''மனதின்கண் உள்ளதை' என்றோ எழுதுகின்றனர்.  இவை தவறான பயன்பாடுகளாகும்.  இவை முறையே, 'மனத்தை வேதனைப்படுத்தியது', 'மனத்தால் நம்பினார்', 'மனத்துக்கு இதமாயிருந்தது', 'என் மனத்தின் வேதனை', 'மனத்தினது நிலையை', 'மனத்தின்கண் உள்ளதை' என்று முறையாக எழுதப்படல் வேண்டும்.  இதனை ஓர் எளிமையான எடுத்துக்காட்டினால் விளங்கலாம்.  'பணம்' என்பது எல்லாருக்கும் வேண்டிய ஒன்றுதானே?  'பணத்தை', 'பணத்தால்', 'பணத்திற்கு', 'பணத்தின்', 'பணத்தினது' என்றுதானே எழுதுகின்றோம்!  பிறகென்ன, 'மனம்' மட்டும் மாறிவிடுகின்றது?!  'மனம்' என்பதை 'மனசு' என்று கொச்சையாகவும் எழுதக் கூடாது.  இது தெலுங்கு மொழியிலிருந்து வந்த திரிபு என்பதை உணர்க.

விட்டா? விட்டுமா?: 'நரகத்தை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதினால், 'நரகத்தை ஏவிவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்பது போல் அனர்த்தமாகிவிடும்.  பிறகு எப்படி எழுதவேண்டும்?  'நரகத்தைவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதவேண்டும்.
(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்...)  
- அதிரை அஹ்மது