Monday, April 9, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-5

அருகில் மனம் விட்டு 


'நல்ல தமிழ் எழுதுவோம்; நம் மொழியைப் பேணுவோம்' என்ற ஒரே நோக்கத்தில் பதிவு பெற்று வரும் இத்தொடர், எனது ஆய்வையும் பட்டறிவையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் ஒன்றாகும்.  இதில் சுட்டிக் காட்டப் பெறும் திருத்தங்களுக்கான சான்றுகள் தொல்காப்பியம், நன்னூல் போன்ற மொழியியல் நூல்களில் விரவிக் கிடக்கின்றன.  ஆனால், அச்சான்றுகளையும் எடுத்தெழுதினால், விரையும் நேரச் சூழலில் விளைவு போற்றத் தக்கதாக இருக்காது என்றெண்ணியே, சான்றுகளை விடுத்துச் சரக்குகளை மட்டும் இறக்கி வைக்கின்றேன்.  இனித் தொடர்வோம்...

அருகாமை...!: 'அருகில்' என்று பிழையின்றி எழுதுவதை விடுத்து, நம்மில் பலர், 'அருகாமையில்' என்று பிழைபட எழுதுகின்றனர்!  இவர்களின் நோக்கம், 'கவர்ச்சியாக எழுதுகின்றோம்' என்பதாக இருக்கலாம்.  இது மிகப் பெருந்தவறாகும்.  ஏனெனில், 'அருகில்' எனும் சொல்லில் வேறொரு பொருளைத் தரும் சொல் மறைந்து கிடக்கவில்லை.  ஆனால், 'அருகாமை' என்பதில் மாற்றுப் பொருள் தரும் வேறொரு சொல் பொதிந்துள்ளது!  அதாவது, அருகுதல் = சுருங்குதல், குறைந்து போதல் என்ற வேறுபாடான பொருள் தரும் நிலை உள்ளது.  நெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் குறைதலுக்கும் வேறுபாடு உண்டாகி, 'சுருங்காமை', அல்லது 'குறையாமை' என்ற பொருள்களைத் தருகின்றதல்லவா?  எனவே, அண்மையக் குறிக்க, 'அருகில்' என்று எழுதுவதே சரியானது; 'அருகாமை' தவறானது.
மனமா? மனதா? மனசா?:  உள்ளம் என்பதற்கு 'மனம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.  'மன மகிழ்ச்சி', 'மன வேதனை', 'மன நிலை' என்றெல்லாம் எழுதுவோம்.  இல்லையா?  ஆனால், நம்மில் பலர் 'மனம்' என்ற சொல்லோடு வேற்றுமை உருபுகளான ஐ-ஆல்-கு-இன்-அது-கண் என்பவற்றைச் சேர்க்கும்போது, 'மனம்' என்பதை 'மனது' என்று மாற்றி, 'மனதை வேதனைப்படுத்தியது' என்றோ, 'மனதால் நம்பினார்' என்றோ, 'மனதுக்கு இதமாயிருந்தது' என்றோ, 'என் மனதின் வேதனை' என்றோ, 'மனதினது நிலையை' என்றோ, ''மனதின்கண் உள்ளதை' என்றோ எழுதுகின்றனர்.  இவை தவறான பயன்பாடுகளாகும்.  இவை முறையே, 'மனத்தை வேதனைப்படுத்தியது', 'மனத்தால் நம்பினார்', 'மனத்துக்கு இதமாயிருந்தது', 'என் மனத்தின் வேதனை', 'மனத்தினது நிலையை', 'மனத்தின்கண் உள்ளதை' என்று முறையாக எழுதப்படல் வேண்டும்.  இதனை ஓர் எளிமையான எடுத்துக்காட்டினால் விளங்கலாம்.  'பணம்' என்பது எல்லாருக்கும் வேண்டிய ஒன்றுதானே?  'பணத்தை', 'பணத்தால்', 'பணத்திற்கு', 'பணத்தின்', 'பணத்தினது' என்றுதானே எழுதுகின்றோம்!  பிறகென்ன, 'மனம்' மட்டும் மாறிவிடுகின்றது?!  'மனம்' என்பதை 'மனசு' என்று கொச்சையாகவும் எழுதக் கூடாது.  இது தெலுங்கு மொழியிலிருந்து வந்த திரிபு என்பதை உணர்க.

விட்டா? விட்டுமா?: 'நரகத்தை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதினால், 'நரகத்தை ஏவிவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்பது போல் அனர்த்தமாகிவிடும்.  பிறகு எப்படி எழுதவேண்டும்?  'நரகத்தைவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதவேண்டும்.
(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்...)  
- அதிரை அஹ்மது

No comments:

Post a Comment