Thursday, March 15, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-4

ஒன்றும் பலவும் (தொடர்)

வெகுவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுள் குறிப்பிடத் தக்கவை, மறுப்புச் சொற்களாகும்.  நாள், வார, மாத இதழ்களிலும் இணையக் கட்டுரைகளிலும் நம் கண்களை உறுத்தும் பிழைகள் இந்த மறுப்புச் சொற்களில் ஏராளம் என்றால் மிகையாகாது.  சற்றே ஊன்றிப் படியுங்கள்.


அன்று – அல்ல – அல்லன் – அல்லர்:

ஒருமை, பன்மை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு இச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழ் இலக்கண வரம்பாகும்.  மாறுபாடான தன்மையைச் சுட்டிக் காட்டி மறுத்துரைப்பதற்காக, “இது சரியல்ல” என்றோ, “இது சரியில்லை” என்று எழுதுவது தவறில்லாதது போன்று தெரிகிறது.  ஆனால், தவறு!  எப்படி?

‘இது’ என்பது ஒருமையாகும்.  ‘அல்ல’ என்பது, பன்மையின் மறுப்புச் சொல்லாகும்.  ஒருமையும் பன்மையும் ஒன்றுபடுமா?  எனவே, ‘இது சரியன்று’ என எழுதுதலே சரியாகும் என்பதை அறிக!  ‘அன்று’ என்ற ஒருமை மறுப்புச் சொல்லின் பன்மையே ‘அல்ல’ என்பதாகும்.  இவ்வாறு தவறின்றி எழுதும் பழக்கம் கைவரப் பெறுவது எவ்வாறு?  எழுதிச் செல்லும்போது ஒருமை-பன்மை மீது சற்றே கவனம் வைத்தால் போதும்.  அவ்வளவுதான்.

ஒருவர், “நான் குற்றவாளியில்லை” என்று எழுதினார்.  ஆனால், அவர் தவறிழைத்தவர்!  எதில்?  எழுத்தில்.  ‘அல்ல’, ‘இல்லை’ என்ற சொற்களை ஒருமையுடன் இணைத்து எழுதிய குற்றவாளி ஆகிவிட்டார்!  “நான் குற்றவாளி அல்லன்” என்றே எழுதியிருக்க வேண்டும்.

இது போன்றே, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்” என்று எழுதுவதற்குப் பகரமாக, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல” என்று எழுதக் கூடாது.  ‘அல்லன்’ என்ற ஒருமையின் பன்மை ‘அல்லர்’ என்பதாகும்.  இவை உயர்தினைக்கே வரும்.  அஃறிணையுடன் வரும் மறுப்புச் சொல் ‘அல்ல’ என்பதாகும்.  “காரணங்கள் அவையல்ல” என்பது போன்று எழுதுதல் வேண்டும்.  

சில – பல – சிலர் – பலர்:  

இவையனைத்தும் பன்மைகளாகும்.  ஆனால், இவை சுட்டும் திணைக்குத் தக்கவாறு மாறுபட்டுப் பயன்படுத்தப்படும்.  ‘சில’ என்பதும் ‘பல’ என்பதும் அஃறிணைக்கே சார்பாக வரும்.  “சில நண்பர்கள்” என்றோ, “பல மக்கள்” என்றோ எழுதுவது தவறாகும்.  இவற்றை, “நண்பர்கள்” என்று மட்டுமோ, “மக்கள்” என்று மட்டுமோ எழுதலாம்.  அல்லது, “நண்பர்கள் பலர்” என்று, அல்லது “மக்கள் பலர்” என்றும் எழுதலாம்.

உண்டு:

பலர் இச்சொல்லை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்!  ‘இருக்கின்றது’ என்பதற்கு இணையான மற்றொரு சொல், ‘உண்டு’ என்பதாகும்.  இதனை உயர்திணைக்குப்  பயன்படுத்துவது, பெருந்தவறாகும்.  “ஆடு உண்டு”, “மாடு உண்டு” என்று சொன்னால் தவறில்லை.  “மனிதன் உண்டு” என்று சொன்னால்....?  தவறுதானே?  “மனிதன் உள்ளான்” அல்லது, “மனிதர் உள்ளார்” அல்லது, “மனிதன் இருக்கின்றான்” என்று எழுதுதலே முறையாகும்.      


(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)    

- அதிரை அஹ்மது

No comments:

Post a Comment