Tuesday, March 13, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்!- தொடர் 1


உயர்வான இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய கருத்துகள் சிறப்பான – பிழையில்லாத தமிழ் நடையில் எழுதப்பட்டு வந்தால், நல்ல இலக்கியங்கள் உருவாகும். (இதற்கோர் எடுத்துக்காட்டு, அண்மையில் வெளிவந்த ‘தோழர்கள்’ எனும் நூல்.) அவற்றைக் கொண்டு ‘த அவா’ செய்தால் நிறைந்த பலனைக் காணலாம் என்பது எனது கருத்து.  இதன் விளைவாக உருவானதே இக்கட்டுரைத் தொடர்.
எழுத்தாளர்களுக்குச் சுட்டிக் காட்டித் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிழைகள் ஏராளம் உள்ளன.  அவற்றுள், என் பார்வையில் பட்ட சிலவற்றை மட்டும் தொகுத்துரைக்க முயல்கின்றேன்.  இத்தொடரில் சுட்டிக் காட்டப்பெறும் எழுத்து, சொல், கருத்துப் பிழைகள் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் புலமையாளர்கள் சிலரின் எழுத்தோவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்!  தக்க சான்றுகளுடன் அவற்றையும் சுட்டிக் காட்டுவேன்.  திருத்திக்கொள்வது நன்று.  வாசகர்களின் கருத்துகள் வரவேற்கத் தக்கவை. 
அல்லாஹ் அவர்களை (!):  ‘அல்லாஹ்’வை அவன் என்று ஒருமையில்தான் அழைக்க வேண்டும்.  அல்லாஹ்வுக்குப் பிறகு பன்மைச் சொல் வந்தால் பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு.  எ.கா: ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்ற சொற்றொடரில் பொருள் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை முறையாக எப்படி மாற்றி எழுத வேண்டும்?  ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்’ என்று மாற்றி எழுதினால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்.  அல்லது, அல்லாஹ் என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு காற்புள்ளியை (கமாவை) இட்டுவிட்டாலும் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும். 
நபிகளார்:   ‘நபிகள் நாயகம்’ என்பது, நபிகள் அனைவருக்கும் நாயகம் (தலைவர்) அல்லது நபிகளின் நாயகம் ஆனவர் என்ற பொருளில் ஆளப்படும் சொற்றொடர் ஆகும்.  இதில் உள்ள ‘கள்’ பன்மை விகுதியை இன்று பலர் (நபிகளார் என்று) ஒருமையிலேயே பயன்படுத்துகின்றனர்!  ‘நபியார்’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.  அதை விடுத்து, ‘நபிகளார்’ என்று எழுதுவது  தவறு.  அதற்குப் பகரமாக, ‘நபியவர்கள்’ என்று எழுதலாம்.  
------------------------
அதிரை அஹமது
நன்றி-அதிரை எக்ஸ் பிரஸ்                                     

No comments:

Post a Comment